Friday, March 9, 2018

4. பாட்டி வேண்டாம்!

மாமியார் மருமகள் சண்டை என்பதெல்லாம் போன தலைமுறையோடு முடிந்து போன விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்த ராமு தன்  மருமகள் மூலம் அது ஒரு புதிய வடிவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 

பிரச்னை அவன் மனைவிக்கும் மருமகளுக்கும் இடையே இல்லை, அவன் அம்மாவுக்கும் மருமகளுக்கும் இடையே!

ராமுவின் அம்மா சுந்தரிக்கு 85 வயது. அவளுக்கு இரு மகன்கள் இருந்தாலும், தன் இரண்டாவது மகன் ராமுவின் வீட்டிலேயேதான் பெரும்பாலும் இருந்து கொண்டிருந்தாள். 

பெரியவன் தாமுவின் மனைவி சிவகாமிக்கும் அவளுக்கும் ஒத்துப் போவதில்லை என்பதால் பெரிய மகன் வீட்டுக்கு எப்போதோ ஒருமுறைதான் போவாள். நான்கைந்து நாட்கள் இருந்து விட்டு வந்து விடுவாள். அதற்கு மேல் அவளால் அங்கே தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை.

கடந்த காலத்தில், சுந்தரிக்கும் ராமுவின் மனைவி செண்பகத்துக்கும் இடையே அவ்வப்போது சில வாக்குவாதங்களும், சில சமயம் சற்றுத் தீவிரமான கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வந்தாலும், இருவருமே அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டு குடும்பத்தில் பிரச்னை எதுவும் எழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் மகன் அரவிந்துக்குத் திருமணம் ஆகி ஷீலா மருமகளாக வந்ததும் சுந்தரிக்கும் ஷீலாவுக்கும் இடையே பிரச்னைகள் எழ ஆரம்பித்தன. 

ஷீலா தினமும் குளிப்பதில்லை என்று சுந்தரி சுட்டிக் காட்டுவதில் தொடங்கி, சுந்தரி தங்கள் அறைக்குள் வந்து கட்டிலில் துணிகள் குவிந்து கிடப்பதைக் குற்றம் சொன்னதைத் தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் பாட்டி தலையிடுவதாகக் கருதி ஷீலா ஆட்சேபிப்பது என்று தினமும் உரசல்கள் வளர்ந்து கொண்டே போயின.

"அத்தை! உங்களுக்கு எந்தவித அசௌகரியமும் இல்லாம நான் பாத்துக்கறேன். அரவிந்த், ஷீலா கிட்ட எதுவும் சொல்லாதீங்க. அவங்க தலைமுறையில எல்லாமே மாறிடுச்சு. நீங்க எதிர்பாக்கற மாதிரி அவங்க இருக்க மாட்டாங்க!" என்று செண்பகம் தன் மாமியாரிடம் சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் சுந்தரி கேட்கவில்லை. "நான் என்ன அவங்ககிட்ட எனக்குப்  பணிவிடை செய்யுங்கன்னா கேக்கறேன்? அவங்க நல்லதுக்காகச் சில விஷயங்களைச் சொல்றேன். திரும்பத் திரும்பச் சொன்னா கொஞ்சம் கொஞ்சமா மாறுவாங்க. உன்கிட்டயே எத்தனையோ தடவை சொன்னப்பறம்தானே நீ கொஞ்சமாவது உன்னை மாத்திக்கிட்டிருக்க!" என்றாள் சுந்தரி.

செண்பகத்துக்குச் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. 'உங்க பெரிய மருமகள் ஏன் உங்க பேச்சைக் கேக்கல? நீங்க சொல்றதெல்லாம் பிடிக்காமதானே உங்களைத் தங்களோட வீட்டில இருக்க விடாம பண்ணிக்கிட்டிருக்கா? நான் பொறுமையா இருக்கற மாதிரி உங்க பேரனோட மனைவியும் இருக்கணும்னு எதிர்பார்த்தா, அது எப்படி நடக்கும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அரவிந்த்-ஷீலாவுக்குக் குழந்தை பிறந்ததும் பிரச்னை இன்னும் அதிகமாகி விட்டது. குழந்தை வளர்ப்பு பற்றி சுந்தரி சொன்ன யோசனைகளை ஷீலா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஆயினும் சுந்தரி சளைக்காமல் எதாவது குற்றம் கூறிக் கொண்டே இருந்தாள்.

 'நான் பாத்துக்கறேன் அத்தை. நீங்க கொஞ்சம் பொறுமையா, அமைதியா இருங்க!" என்று செண்பகம் எவ்வளவோ முறை பணிவாகக் கேட்டுக் கொண்டாலும் சுந்தரி தன்  போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்கு முன்பே பிரச்னை முற்றி விட்டது.

ருநாள் அரவிந்த் தயங்கியபடியே ராமுவிடம் வந்து "அப்பா! பாட்டி ஏன் எப்பவும் நம்ம வீட்டிலேயே இருக்காங்க? பெரியப்பா வீட்டில கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?" என்று சொன்னபோது பிரச்னை மிகவும் தீவிரமாகி விட்டது என்று ராமுவுக்குப் புரிந்தது.

ராமுவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

செண்பகம்தான் பதில் சொன்னாள். "பாட்டி எங்கே இருக்காங்கறது அவங்க விருப்பம். நீ ஏன் அதை பத்திக் கேக்கற?" என்றாள் மகனிடம், சற்றுக் கடுமையாக.

"இல்லம்மா. பாட்டிக்கும் ஷீலாவுக்கும் ஒத்து வரல. அதான் பாட்டி பெரியப்பா வீட்டில போய்க் கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தா நல்லா இருக்குமேன்னு.." என்று இழுத்தான் அரவிந்த்.

"அப்படின்னு ஷீலா சொன்னாளா? இங்க பாருடா! உன்னோட உங்கம்மாவான நான் இருக்கற மாதிரி, பாட்டியும் உங்க அப்பாவோடதான் இருப்பாங்க." என்றாள் செண்பகம்

அறைக்குள்ளிருந்த ஷீலா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். 

"அது சரியா வராது அத்தை. பாட்டிக்கு நீங்க வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிடுங்க" என்று சொல்லி விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள்.

அரவிந்த் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தான்.

"ஏற்பாடு பண்ணணுமாம்! இங்க பாருடா அரவிந்த்! உங்க குழந்தையைப் பாத்துக்கணும்கறதுக்காகத்தான் நாங்க இங்கே இருக்கோம். நம்ம வீட்டில குடியிருக்கறவங்களைக் காலி பண்ணச் சொல்லிட்டு நாங்க மூணு பேரும் நம்ம வீட்டுக்கே போயிடறோம். குழந்தையைப் பாத்துக்க நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கங்க!" என்றாள் செண்பகம் கோபத்துடன்.

"அவசரப்படாதே செண்பகம்!" என்றான் ராமு.

"என்னங்க நீங்க? ஷீலா எப்படிப் பேசிட்டுப் போறா பாருங்க! இவர்களுக்காக உங்க அம்மாவை நாம விட்டுட முடியுமா?"

"அம்மா! அவசரப்படாதே! ஷீலா தப்பா ஒன்னும் சொல்லல.பாட்டி கொஞ்ச நாள் பெரியப்பா வீட்டுக்குப் போய் இருக்கட்டும். அது முடியாதுன்னா ஷீலா சொன்ன மாதிரி வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிடுங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது" என்று சொல்லி விட்டு அரவிந்த் அறைக்குள் போய் விட்டான்.

"சரி வா. என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்று ராமு ஷீலாவுடன் தங்கள் அறைக்குள் செல்ல முற்பட்டான்.

"ராமு, செண்பகம்! இங்க வாங்க!" என்று குரல் கேட்டது. அழைத்தது சுந்தரிதான்.

சுந்தரியின் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

செண்பகம் அருகில் வந்ததும் அவள் கையைப் பிடித்துக் கொண்ட சுந்தரி "செண்பகம்! உன்னை மாதிரி மருமக கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும். எனக்காக உன் பிள்ளையையே விட்டுட்டு வரேங்கரியே" என்றபோது அவள் குரல் தழுதழுத்தது.

ராமுவைப் பார்த்து "ராமு! இன்னிக்கே என்னை தாமு வீட்டில கொண்டு விட்டுடு. அங்க போயி அஞ்சாறு மாசம் இருந்துட்டு வரேன்" என்றாள்.

"என்னம்மா இது? அதெல்லாம் வேண்டாம். அரவிந்த் கிட்ட நான் பேசிக்கறேன்" என்றான் ராமு.

"வேண்டாம் அத்தை. உங்களுக்குத்தான் அங்கே ஒத்து வராதே!" என்றாள்  சுந்தரி.

"ஒத்து வரது என்ன? சிவகாமி என்ன எனக்கு ரெண்டு வேளை சாப்பாடு கூடப் போடாமலா இருந்துடப் போறா? கொஞ்சம் வாய்த் துடுக்காப் பேசுவா, அவ்வளவுதான்.அதைப் பொருட்படுத்தாம நான் பாட்டுக்கு இருந்தா பிரச்னையே இல்லியே!"

"ஏன் அத்தை? கோவத்துல இப்படி ஒரு முடிவை எடுத்தீங்களா?" என்றாள் செண்பகம்.

"கோவம் எதுவும் இல்லடி. அரவிந்த் குழந்தையா இருந்தப்ப உங்களுக்கு உதவியா இருந்து நான் குழந்தையைப் பாத்துக்கிட்டேன். அது மாதிரி அரவிந்தோட குழந்தையை நீங்க பாத்துக்க வேணாமா? அப்பதான் அது நல்லா வளரும்! வளர வேண்டிய உயிர்தான் முக்கியம். எனக்கென்ன? சீக்கிரமே போகப் போற உயிரு. இங்க இருந்து காலத்தை ஒட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி தாமு வீட்டில இருந்துகிட்டு காலத்தை ஒட்டிட்டுப் போறேன். அப்பப்ப நீங்க ரெண்டு பேரும் என்னை வந்து பாத்துக்கிட்டாப் போதும். நேரம் கிடைக்கறப்ப, அரவிந்த்-ஷீலாவையும், குழந்தையையும் அழைச்சுக்கிட்டு வந்து காட்டுங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுந்தரி.