Friday, March 9, 2018

4. பாட்டி வேண்டாம்!

மாமியார் மருமகள் சண்டை என்பதெல்லாம் போன தலைமுறையோடு முடிந்து போன விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்த ராமு தன்  மருமகள் மூலம் அது ஒரு புதிய வடிவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 

பிரச்னை அவன் மனைவிக்கும் மருமகளுக்கும் இடையே இல்லை, அவன் அம்மாவுக்கும் மருமகளுக்கும் இடையே!

ராமுவின் அம்மா சுந்தரிக்கு 85 வயது. அவளுக்கு இரு மகன்கள் இருந்தாலும், தன் இரண்டாவது மகன் ராமுவின் வீட்டிலேயேதான் பெரும்பாலும் இருந்து கொண்டிருந்தாள். 

பெரியவன் தாமுவின் மனைவி சிவகாமிக்கும் அவளுக்கும் ஒத்துப் போவதில்லை என்பதால் பெரிய மகன் வீட்டுக்கு எப்போதோ ஒருமுறைதான் போவாள். நான்கைந்து நாட்கள் இருந்து விட்டு வந்து விடுவாள். அதற்கு மேல் அவளால் அங்கே தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை.

கடந்த காலத்தில், சுந்தரிக்கும் ராமுவின் மனைவி செண்பகத்துக்கும் இடையே அவ்வப்போது சில வாக்குவாதங்களும், சில சமயம் சற்றுத் தீவிரமான கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வந்தாலும், இருவருமே அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டு குடும்பத்தில் பிரச்னை எதுவும் எழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் மகன் அரவிந்துக்குத் திருமணம் ஆகி ஷீலா மருமகளாக வந்ததும் சுந்தரிக்கும் ஷீலாவுக்கும் இடையே பிரச்னைகள் எழ ஆரம்பித்தன. 

ஷீலா தினமும் குளிப்பதில்லை என்று சுந்தரி சுட்டிக் காட்டுவதில் தொடங்கி, சுந்தரி தங்கள் அறைக்குள் வந்து கட்டிலில் துணிகள் குவிந்து கிடப்பதைக் குற்றம் சொன்னதைத் தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் பாட்டி தலையிடுவதாகக் கருதி ஷீலா ஆட்சேபிப்பது என்று தினமும் உரசல்கள் வளர்ந்து கொண்டே போயின.

"அத்தை! உங்களுக்கு எந்தவித அசௌகரியமும் இல்லாம நான் பாத்துக்கறேன். அரவிந்த், ஷீலா கிட்ட எதுவும் சொல்லாதீங்க. அவங்க தலைமுறையில எல்லாமே மாறிடுச்சு. நீங்க எதிர்பாக்கற மாதிரி அவங்க இருக்க மாட்டாங்க!" என்று செண்பகம் தன் மாமியாரிடம் சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் சுந்தரி கேட்கவில்லை. "நான் என்ன அவங்ககிட்ட எனக்குப்  பணிவிடை செய்யுங்கன்னா கேக்கறேன்? அவங்க நல்லதுக்காகச் சில விஷயங்களைச் சொல்றேன். திரும்பத் திரும்பச் சொன்னா கொஞ்சம் கொஞ்சமா மாறுவாங்க. உன்கிட்டயே எத்தனையோ தடவை சொன்னப்பறம்தானே நீ கொஞ்சமாவது உன்னை மாத்திக்கிட்டிருக்க!" என்றாள் சுந்தரி.

செண்பகத்துக்குச் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. 'உங்க பெரிய மருமகள் ஏன் உங்க பேச்சைக் கேக்கல? நீங்க சொல்றதெல்லாம் பிடிக்காமதானே உங்களைத் தங்களோட வீட்டில இருக்க விடாம பண்ணிக்கிட்டிருக்கா? நான் பொறுமையா இருக்கற மாதிரி உங்க பேரனோட மனைவியும் இருக்கணும்னு எதிர்பார்த்தா, அது எப்படி நடக்கும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அரவிந்த்-ஷீலாவுக்குக் குழந்தை பிறந்ததும் பிரச்னை இன்னும் அதிகமாகி விட்டது. குழந்தை வளர்ப்பு பற்றி சுந்தரி சொன்ன யோசனைகளை ஷீலா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஆயினும் சுந்தரி சளைக்காமல் எதாவது குற்றம் கூறிக் கொண்டே இருந்தாள்.

 'நான் பாத்துக்கறேன் அத்தை. நீங்க கொஞ்சம் பொறுமையா, அமைதியா இருங்க!" என்று செண்பகம் எவ்வளவோ முறை பணிவாகக் கேட்டுக் கொண்டாலும் சுந்தரி தன்  போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்கு முன்பே பிரச்னை முற்றி விட்டது.

ருநாள் அரவிந்த் தயங்கியபடியே ராமுவிடம் வந்து "அப்பா! பாட்டி ஏன் எப்பவும் நம்ம வீட்டிலேயே இருக்காங்க? பெரியப்பா வீட்டில கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?" என்று சொன்னபோது பிரச்னை மிகவும் தீவிரமாகி விட்டது என்று ராமுவுக்குப் புரிந்தது.

ராமுவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

செண்பகம்தான் பதில் சொன்னாள். "பாட்டி எங்கே இருக்காங்கறது அவங்க விருப்பம். நீ ஏன் அதை பத்திக் கேக்கற?" என்றாள் மகனிடம், சற்றுக் கடுமையாக.

"இல்லம்மா. பாட்டிக்கும் ஷீலாவுக்கும் ஒத்து வரல. அதான் பாட்டி பெரியப்பா வீட்டில போய்க் கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தா நல்லா இருக்குமேன்னு.." என்று இழுத்தான் அரவிந்த்.

"அப்படின்னு ஷீலா சொன்னாளா? இங்க பாருடா! உன்னோட உங்கம்மாவான நான் இருக்கற மாதிரி, பாட்டியும் உங்க அப்பாவோடதான் இருப்பாங்க." என்றாள் செண்பகம்

அறைக்குள்ளிருந்த ஷீலா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். 

"அது சரியா வராது அத்தை. பாட்டிக்கு நீங்க வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிடுங்க" என்று சொல்லி விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள்.

அரவிந்த் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தான்.

"ஏற்பாடு பண்ணணுமாம்! இங்க பாருடா அரவிந்த்! உங்க குழந்தையைப் பாத்துக்கணும்கறதுக்காகத்தான் நாங்க இங்கே இருக்கோம். நம்ம வீட்டில குடியிருக்கறவங்களைக் காலி பண்ணச் சொல்லிட்டு நாங்க மூணு பேரும் நம்ம வீட்டுக்கே போயிடறோம். குழந்தையைப் பாத்துக்க நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கங்க!" என்றாள் செண்பகம் கோபத்துடன்.

"அவசரப்படாதே செண்பகம்!" என்றான் ராமு.

"என்னங்க நீங்க? ஷீலா எப்படிப் பேசிட்டுப் போறா பாருங்க! இவர்களுக்காக உங்க அம்மாவை நாம விட்டுட முடியுமா?"

"அம்மா! அவசரப்படாதே! ஷீலா தப்பா ஒன்னும் சொல்லல.பாட்டி கொஞ்ச நாள் பெரியப்பா வீட்டுக்குப் போய் இருக்கட்டும். அது முடியாதுன்னா ஷீலா சொன்ன மாதிரி வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிடுங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது" என்று சொல்லி விட்டு அரவிந்த் அறைக்குள் போய் விட்டான்.

"சரி வா. என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்று ராமு ஷீலாவுடன் தங்கள் அறைக்குள் செல்ல முற்பட்டான்.

"ராமு, செண்பகம்! இங்க வாங்க!" என்று குரல் கேட்டது. அழைத்தது சுந்தரிதான்.

சுந்தரியின் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

செண்பகம் அருகில் வந்ததும் அவள் கையைப் பிடித்துக் கொண்ட சுந்தரி "செண்பகம்! உன்னை மாதிரி மருமக கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும். எனக்காக உன் பிள்ளையையே விட்டுட்டு வரேங்கரியே" என்றபோது அவள் குரல் தழுதழுத்தது.

ராமுவைப் பார்த்து "ராமு! இன்னிக்கே என்னை தாமு வீட்டில கொண்டு விட்டுடு. அங்க போயி அஞ்சாறு மாசம் இருந்துட்டு வரேன்" என்றாள்.

"என்னம்மா இது? அதெல்லாம் வேண்டாம். அரவிந்த் கிட்ட நான் பேசிக்கறேன்" என்றான் ராமு.

"வேண்டாம் அத்தை. உங்களுக்குத்தான் அங்கே ஒத்து வராதே!" என்றாள்  சுந்தரி.

"ஒத்து வரது என்ன? சிவகாமி என்ன எனக்கு ரெண்டு வேளை சாப்பாடு கூடப் போடாமலா இருந்துடப் போறா? கொஞ்சம் வாய்த் துடுக்காப் பேசுவா, அவ்வளவுதான்.அதைப் பொருட்படுத்தாம நான் பாட்டுக்கு இருந்தா பிரச்னையே இல்லியே!"

"ஏன் அத்தை? கோவத்துல இப்படி ஒரு முடிவை எடுத்தீங்களா?" என்றாள் செண்பகம்.

"கோவம் எதுவும் இல்லடி. அரவிந்த் குழந்தையா இருந்தப்ப உங்களுக்கு உதவியா இருந்து நான் குழந்தையைப் பாத்துக்கிட்டேன். அது மாதிரி அரவிந்தோட குழந்தையை நீங்க பாத்துக்க வேணாமா? அப்பதான் அது நல்லா வளரும்! வளர வேண்டிய உயிர்தான் முக்கியம். எனக்கென்ன? சீக்கிரமே போகப் போற உயிரு. இங்க இருந்து காலத்தை ஒட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி தாமு வீட்டில இருந்துகிட்டு காலத்தை ஒட்டிட்டுப் போறேன். அப்பப்ப நீங்க ரெண்டு பேரும் என்னை வந்து பாத்துக்கிட்டாப் போதும். நேரம் கிடைக்கறப்ப, அரவிந்த்-ஷீலாவையும், குழந்தையையும் அழைச்சுக்கிட்டு வந்து காட்டுங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுந்தரி.

Saturday, November 25, 2017

3. கை கொடுத்த கலை (தலை!)

திருமணத்துக்குப் பின் அபயா வேலைக்குப் போக வேண்டாம் என்று கார்த்திக் சொன்னபோது பலரும் முகம் சுளித்தார்கள். 

"இந்தக் காலத்தில இப்படி யாராவது சொல்லுவாங்களா என்ன?" என்றாள் அபயாவின் அம்மா.

ஆனால் அபயா இதை இயல்பாக எடுத்துக் கொண்டாள். வேலையை விடுவதில் அவளுக்கு  வருத்தம் இல்லை. 

புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வது, சமையலில் புதிய முயற்சிகள் செய்வது போன்றவற்றில் அவளுக்கு ஆர்வம் இருந்ததால், வீட்டில் இருந்து கொண்டு தனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

ஆனால் திருமணத்துக்குப் பின் கார்த்திக் அவளை சுதந்திரமாக இருக்க விடவில்லை. 

வீட்டில் அவர்கள் இரண்டு பேர்தான். குடும்பச் செலவுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கொடுத்து வந்தவன், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைக் குறைத்து விட்டான்.

"ஏன், விலைவாசியெல்லாம் குறைஞ்சுடுச்சா, இல்லை ஆஃபீஸ்ல உங்க சம்பளத்தைக் குறைச்சுட்டாங்களா?" என்றாள் அபயா. 

"ரெண்டும் இல்லை. நீ ஊதாரித்தனமா செலவு பண்ணிக்கிட்டிருக்கே! எம்ப்ராய்டரி பண்றேன்னு வீடு முழுக்க கலர் நூலும் ஊசியுமாப் பரப்பி வச்சிருக்கே! புதுசு புதுசாச் சமைக்கிறேன்னு சாமான்களை வேஸ்ட் பண்றே! ஆனா எதையுமே வாயில வைக்க முடியல...."

"வாயில வைக்க முடியாமத்தான் இன்னும்  கொஞ்சம் போடுன்னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டீங்களா?"

"எதோ ஒண்ணு ரெண்டு நல்லா இருந்திருக்கலாம்.. உனக்கு சிக்கனம்னா என்னன்னு தெரியணும். அதான் அமௌண்ட்டை கட் பண்ணிட்டேன்" என்றான் கார்த்திக் பெருமையுடன்.

"நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்கிட்டிருந்தா இந்த நிலை எனக்கு வந்திருக்காதே!" என்றாள் அபயா. சொல்லும்போதே அழுகை பீறிட்டெழ, குரல் கம்மியது.

"என்ன நிலைமை வந்துடுச்சு உனக்கு? நான் என்ன ராமர் மாதிரி உன்னைக் காட்டுக்கு அனுப்பிட்டேனா என்ன?"

"அப்படிப் பண்ணினாலும் பரவாயில்லை. காட்டில பழங்களைப் பறிச்சு சாப்பிட்டுட்டு மான்களையும் முயல்களையும் பாத்துக்கிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருந்திருப்பேன்."

"காட்டில மானும், முயலும் மட்டும்தான் இருக்குமா? சிங்கம், புலி, நரி எல்லாம் கூடத்தான் இருக்கும்!"

"காட்டில் மட்டும்தானா?" என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்ட அபயா, "அப்படின்னா நான் வேலைக்குப் போறேன்!" என்றாள்.

கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை. 

ஆனால் அவளுக்கு ஏற்ற வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அவளுடைய பி.எஸ்.சி படிப்பு மற்றும் குறைந்த அனுபவம்  இவற்றால் ஒரு நல்ல வேலையை அவளுக்குப் பெற்றுத் தர இயலவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகும் அவளுக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆயினும் அபயா சோர்வடையாமல் முயன்று கொண்டுதான் இருந்தாள்  

அப்போது எதிர்பாராத விதத்தில், எதிர்பார்க்கக் கூடிய ஒன்று நிகழ்ந்து விட்டது. அவள் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகத் தொடங்கி விட்டது.  இனி வேலை வேட்டை அவ்வளவுதான் என்று முயற்சிகளை மூட்டை கட்டி விட்டாள் அபயா.

அபயா கருவுற்ற பிறகும், கார்த்திக்கின் போக்கு மாறவில்லை. டாக்டர் கூறியபடி அவளுக்கு மருந்துகள், டானிக்குகள் வாங்கிக் கொடுத்தான். மற்றபடி வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் அவனுடைய பிடிவாதமான கஞ்சத்தனம் தொடர்ந்தது.

அபூர்வா பிறந்த பிறகும் கார்த்திக்கின் அணுகுமுறையில் மாற்றமில்லை. குழந்தைக்கென்று அவள் எதையும் விரும்பி வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 

"ஏதாவது வேணும்னா எங்கிட்ட சொல்லு. நான் வாங்கித் தரேன்" என்பான் கார்த்திக். ஏதோ அவளிடம் பணம் கொடுத்தால், அதை அவள் தொலைத்து விடுவாள் அல்லது வீணாக்கி விடுவாள் என்று நினைப்பது போல் இருந்தது அவன் பேச்சு.

குழந்தைக்கு இரண்டு வயதானதும் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டியதுதான் என்று முடிவு செய்தாள் அபயா. குழந்தையை எங்காவது காப்பகத்தில் விட வேண்டியததுதான். 

பிறந்ததிலிருந்து இரண்டு வருடம் அம்மாவுடனேயே இருந்த குழந்தை தினமும் பத்து மணி நேரம் அம்மாவைப் பிரிந்திருக்குமா? ரொம்ப அழுவாளோ? 

குழந்தை சமாதானமடைந்து இயல்பாக இருக்கப் பல மாதங்கள் பிடிக்கலாம். வேறு வழியில்லை. கார்த்திக்கின் முரட்டுப்  பிடிவாதத்தால், அவள் தன் குழந்தைக்கு வேண்டியதைக் கூடச் செய்ய முடியாமல் போன நிலையில், அவள் சம்பாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.  

ருநாள் கார்த்திக்கிடம் "குழந்தைக்கு ஹேர்கட் பண்ணணும். நூறு ரூபாய் கொடுங்க" என்றாள் அபயா.

அபூர்வாவின் தலையைப் பார்த்து விட்டு "முடி ஒண்ணும் அதிகமா இல்லியே! பெண் குழந்தைக்கு முடி நிறைய இருந்தாத்தான் நல்லது" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அபயாவுக்கு ஆத்திரமும், இயலாமையும்  பொங்கிக் கொண்டு வந்தன. அது மாதக் கடைசி. அவளிடம் கொஞ்சம்தான் பணம் இருந்தது. அதில் நூறு ரூபாயை முடி வெட்டச் செலவழித்து விட்டால் வேறு ஏதாவது செலவுக்கு இடிக்கும். 

சில நாட்கள் கழித்து, மாதம் பிறந்ததும், கார்த்திக் பணம் கொடுப்பான். அப்புறம் கூட முடி வெட்டிக் கொள்ளலாம். குழந்தைக்கு முடி வெட்டக் கூடப்  பணம் இல்லாமல் அவ்வளவு மோசமான நிலையிலா தான் இருக்கிறேன் என்று நினைத்தபோது மனதில் கோபமும் துக்கமும் நிரம்பி வழிந்தன.

குழந்தைக்குப் பால் கொடுக்கலாம் என்று பால் காய்ச்ச அடுப்படிக்குப் போனாள். பால் பாக்கெட்டைக்  கத்திரிக்கோலால் வெட்டிப் பிரித்தபோது ஒரு யோசனை தோன்றியது.

பாலைக் காய்ச்சாமலே, கையில் கத்தரிக்கோலுடன் கிடுகிடுவென்று முன்னறைக்கு வந்தாள் ஒரு பழைய செய்தித்தாளைத் தரையில் பிரித்துப் போட்டு அதன்மீது அபூர்வாவை அமர வைத்தாள். கத்தரிக்கோலால் குழந்தையின் தலைமுடியை கவனமாக வெட்டத் தொடங்கினாள்.

மாலை கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் அபூர்வாவின் தலையைப் பார்த்து விட்டு, "ஹேர்கட் பண்ணிட்டியா?" என்றான். அபயா பதில் சொல்லவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த சிறிய குழந்தைப் பூங்காவில் அபூர்வாவை விளையாட விட்டு விட்டு அபயா ஓரமாக அமர்ந்திருந்தபோது, அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு பெண்மணி அவளிடம் வந்து "குழந்தையோட ஹேர்கட் ரொம்ப நல்லா இருக்கே! எங்கே வெட்டினீங்க?" என்றாள் 

"நானேதான் வெட்டி விட்டேன்" என்றாள் அபயா சிரித்துக் கொண்டே.

"ரொம்ப நல்லா இருக்கு. ப்ரொஃபஷனல் ஜாப்!" என்று பாராட்டிய அந்தப் பெண், "நீங்க எந்த ஃபிளாட்டில் இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அடுத்த நாள் அந்தப் பெண் அபயாவின் வீட்டுக்கு வந்தாள், தன் குழந்தையை அழைத்துக் கொண்டு.

"வாங்க" என்று அவர்களை அழைத்து அமர வைத்தாள் அபயா.

"உங்க பொண்ணுக்கு நீங்க செஞ்சிருந்த ஹேர்கட் ரொம்ப நல்லா இருந்தது. நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா என்னோட பையனுக்கும் சிம்பிளா ஹேர்கட் பண்ணி விட முடியுமா? சலூன்ல உக்காரவே மாட்டேன்னு அழுது ஆட்டம் போடறான்" என்றாள் 

"உன் பேரு என்னடா கண்ணா?" என்று அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தடவியபடியே கேட்ட அபயா, ஒரு பழைய செய்தித்தாளைக் கீழே விரித்து அதன் மீது அவனை அமர்த்தினாள். அவன் பின்னே அமர்ந்து அவனுடன் பேச்சுக் கொடுத்தபடியே அவன் முடியை வெட்டினாள். பத்து நிமிடங்களில் வேலை முடிந்து விட்டது. 

"ரொம்ப நல்லா வந்திருக்கு. சலூன்ல கூட இந்த அளவுக்குப் பண்ண மாட்டாங்க. நீங்க ஏதாவது கோர்ஸ் படிச்சிருக்கீங்களா என்ன?" 

அபயா ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்.

"இஃப் யூ டோன்ட் மைண்ட், சலூன்ல நூத்தி இருவது ரூபா கேப்பாங்க. நான் நூறு ரூபா கொடுக்கறேன். நீங்க மறுக்காம வாங்கிக்கணும்" என்றாள்.

அபயா மறுக்கவில்லை. அந்தப் பெண் விடைபெற்றுக்  கிளம்பியபோது,  "உங்களுக்குத் தெரிஞ்சவங்க குழந்தைகளுக்கு ஹேர்கட் பண்ணணும்னாலும் சொல்லுங்க" என்றாள் சற்றுத் தயக்கத்துடன்.

டுத்த சில நாட்களில் அந்தக் குடியிருப்பிலிருந்தும், அக்கம்பக்கத்திலிருந்தும் தினமும் இரண்டு மூன்று பேர் குழந்தைகளுடன் வர ஆரம்பித்தனர். சில நாட்களில் ஐந்தாறு பேர் கூட வந்தனர். 

கார்த்திக்குக்கு விஷயம் தெரிந்ததும், "இது என்ன வீடா சலூனா? ஒரு குடும்பத் தலைவி செய்யற வேலையா இது?" என்றான்,

"அபூர்வாவுக்கு ஹேர் கேட் பண்ணப் பணம் கேட்டேன். நீங்க கொடுக்கல. நானே வெட்டினேன். அது நல்லா இருந்ததுன்னு 'என் குழந்தைக்கும் பண்ணி விடு'ன்னு சில பேர் வந்தாங்க. பண்ணி விட்டேன். நான் கேக்காமயே பணம் கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டேன். பால்கனியில தரையில பேப்பர் போட்டு உக்கார வச்சுத்தான் கட் பண்றேன். முடியையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில போட்டு அவ்வப்போது கீழ போய்க் குப்பைத் தொட்டியில போட்டுடறேன். இங்க வர குழந்தைங்க அபூர்வாவுக்கு ஃபிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. அபூர்வாவும் சந்தோஷமா இருக்கா. உங்களுக்கு இதுல ஏதாவது பிரச்னை இருக்கா?" என்றாள் அபயா.

கார்த்திக் பதில் சொல்லவில்லை. அவனுக்குப் பிடிக்காவிட்டாலும் இதைத் தடுக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டாள்.

சில நாட்கள் கழித்து ஒரு பெண்மணி அபயாவைப் பார்க்க வந்தாள்.

"நீங்க ஹேர்கட் பண்ணுவீங்களாமே!" என்றாள்.

"குழந்தை வரலியா? பையனா, பொண்ணா?" என்றாள் அபயா.

'குழந்தைக்கு இல்லை, எனக்குத்தான். பார்லர்ல ஐநூறு ரூபா கேக்கறாங்க. ரொம்ப  அநியாயமா இருக்கு!"

"எனக்கு முன்னூறு ரூபா கொடுங்க போதும்!" என்றாள் அபயா. 

இனி எப்போதும் கார்த்திக்கின் கையை எதிர்பார்க்க வேண்டி இருக்காது என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றியது.









Monday, November 20, 2017

2. ஒரு நிஜ அம்மா - என் அம்மா!

என் அம்மா எங்களுக்கு (எனக்கு, என் தம்பி, இரு தங்கைகளுக்கு)  அம்மா மட்டும் அல்ல, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழி நடத்துவதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு தேவதை என்பது என் 13-ஆம் வயதில்தான் எனக்குத் தெரிந்தது.

நானும் என் தம்பியும் கோடை விடுமுறைக்கு எங்கள் பாட்டியின் (என் அம்மாவின் அம்மா) வீட்டுக்குச் சென்று திரும்பியபோது எங்கள் அப்பா கூடத்தில் படுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு இடது  கை, இடது கால் செயலிழந்து போனதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

எங்கள் வாழ்க்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சோதனையான கட்டம். 

ஒரு  கிராமத்தில் இருந்து கொண்டு, பொருளாதார வசதியோ, மருத்துவ வசதிகளோ அதிகம் இல்லாத நிலையில், உதவி செய்வதற்கும் யாரும் இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேல் தனியொரு நபராக நிலைமையை என் அம்மா சமாளித்த விதம் பற்றி ஒரு காப்பியமே எழுதலாம்.

எங்கள் அப்பா பிழைக்கவே மாட்டார் என்று எங்களைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோருமே முடிவு கட்டி விட்ட நிலையில், பல மாதங்கள் கழித்து, அவர் எழுந்து  நடமாடியதை ஒரு அதிசயமாக நினைத்து, அந்த அதிசயத்தின் பின்னணியில் இருந்த என் அம்மாவைக் கண்டு ஊரே வியந்தது!

அந்தக் காலப் பெண்கள் பலரைப் போலவே, என் அம்மா படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆயினும், அந்த நெருக்கடியான கால கட்டத்தில், சமையல், குடும்ப நிர்வாகம், எங்களைப்  பார்த்துக் கொள்ளுதல், என் அப்பாவுக்கு வேண்டியவற்றைச் செய்தல் தவிர, நிதி நிர்வாகத்தையும் அம்மாதான் கவனிக்க வேண்டியிருந்தது.

குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது தவிர, என் அப்பாவின் மருத்துவச் செலவுகளுக்காக எங்கள் நிலங்கள் சிலவற்றை விற்பதற்கு ஏற்பாடு செய்ததும் இந்த நிதி நிர்வாகத்தில் அடக்கம்.

இந்தக் காலகட்டத்தில் என் அம்மாவின் செயல்பாடுகள் crisis management என்ற கோட்பாடு பற்றிய ஆய்வாக அமையும்! அவரைப் பார்த்து, நானும் குடும்பத்தில் சில பொறுப்புகளை நிறைவேற்றக்  கற்றுக் கொள்ளத்  தொடங்கினேன்.

என் அம்மாவிடம் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்திய விஷயம் பல்வேறு விஷயங்களைக் கற்பதில் அவருக்கிருந்த ஆர்வம். 

இந்தியப் பண்பாடு, மதம் குறித்த விவரங்கள், புராணங்கள் ஆகியவை பற்றி விரிவாக  அவர் தன் பெற்றோர்களிடமிருந்து - குறிப்பாக, அவருடைய தந்தையிடமிருந்து -  அறிந்து கொண்டிருந்தாலும், விஞ்ஞானம், உலக வரலாறு, நாட்டு நடப்பு, உலக நடப்பு, அடிப்படைப் பொருளாதாரம் போன்ற பல விஷயங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருந்தது. .

பல வருடங்கள் முயன்று 'ஹிந்து' பத்திரிகையை எழுத்துக் கூட்டிப் படித்தே ஓரளவுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளைப் படித்துச் செய்திகளைப் புரிந்து கொள்ளும் திறமையை அவர் வளர்த்துக் கொண்டார்.

நான் சிறுவனாக இருந்தபோது, நடு இரவில் என்னை எழுப்பி, முற்றத்துக்கு அழைத்துச் சென்று, முற்றத்துக்கு மேல் தெரியும் ஆகாயத்தில் சில நட்சத்திரங்களைக் காட்டி விளக்குவார். 

குறிப்பாக சப்தரிஷி மண்டலம் என்று அழைக்கப்படும் ஏழு நட்சத்திரங்கள் வரிசையாக ஒரு கோடு போல் அணிவகுத்திருப்பதைக் காட்டி "கொஞ்ச நேரம் கழிச்சு இந்த வால் அந்தப் பக்கம் திரும்பிடும்" என்று பல நாட்கள் விளக்கியது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. சில சமயம், கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி, "இப்ப அந்த வால்  திரும்பியிருக்கு பார்" என்று காட்டுவார்.

அம்மா எப்போது தூங்குவார் என்று பல முறை நான் வியந்திருக்கிறேன். இரவில், நாங்கள் எல்லோரும் தூங்கிய பிறகே தூங்கப் போகும் அவர், காலையிலும் எங்களுக்கு முன் விழித்து விடுவார். இடையில் நள்ளிரவு நட்சத்திர ஆராய்ச்சி வேறு!

பல இரவுகளில் நான் கண் விழித்துப் பார்க்கும்போது அவர் சிம்னி விளக்கை வைத்துக்கொண்டு ஏதாவது பத்திரிகையோ, புத்தகமோ படித்துக் கொண்டிருப்பார். 

சிம்னி விளக்கில் படித்ததற்குக்  காரணம் , மின் விளக்கில் படித்தால் எங்கள் தூக்கம் கலைந்து விடும் என்பது மட்டுமில்லை. மின்சாரக் கட்டணம் அதிகம் ஆகிவிடக்கூடாது என்பதும்தான்!

பள்ளி மாறுவேடப் போட்டிக்காக பாரதி  வேடம் தரித்த
என் மகனுடன் என் அம்மா
 
நாங்கள் (அவரது குழந்தைகள்) வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது அவருடைய தீவிர விருப்பம், லட்சியம். நன்றாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எங்களிடம் அடிக்கடி வலியுறுத்துவார்.

எங்களைப் போன்ற நடுத்தர வகுப்புக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்வதுதான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்பதை எங்களுக்கு அலுப்பு ஏற்படும் வரை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.

என் அம்மா, என் அப்பாவுடன் பண விஷயமாகச்  சில சமயம் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறேன். சண்டை எல்லாம் பணம் சேமிக்க வேண்டும் என்பதைப்  பற்றித்தான். 

எங்களுக்கு எங்கள் அப்பா விலையுயர்ந்த பொருட்களோ, பிஸ்கட், சாக்லேட் போன்று அந்தக் காலத்தில் ஆடம்பரம் என்று கருதப்பட்ட தின்பண்டங்களோ வாங்கி கொடுப்பதை என் அம்மா விரும்புவதில்லை.

தனக்குப் புடவை, நகை எதுவும் கேட்டு என் அப்பாவிடம் அவர் ஒரு தடவை கூடச் சண்டை போட்டதில்லை. என் அப்பா சிக்கனமாக இருந்து எங்களை நன்கு படிக்க வைக்கப் பணம் சேர்க்க வேண்டும் என்பதுதான் என் அம்மாவின் ஒரே கோரிக்கையாக இருந்தது.

கடின உழைப்பு, சிக்கனம், தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மற்ற குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் (எந்த அளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை!)

ஓரளவுக்கு வசதியான பொருளாதார நிலைக்கு வந்த பிறகும், என் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நான் தாராளமாக இருந்தாலும், அம்மாவிடம் கற்ற சிக்கனம், என் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல் என்ற இரண்டு விஷயங்களையும் பெருமளவு பின்பற்றி வந்திருக்கிறேன்! 

பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட என் அம்மாவின் குணங்களில் இந்த இரண்டையாவது  பின்பற்ற முடிந்தது பற்றி  எனக்குப் பெருமைதான்!

1972-ஆம் ஆண்டு என் கல்லூரிப் படிப்பு முடிந்து நான் வேலைக்குப் போவதற்கு முன்பே என் தந்தை இறந்து விட்டார். 

என் தந்தையின் மரணச் செய்தி பற்றி அறிந்ததும், என் தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வியப்பான வகையில் சிகிச்சையளித்து அவரை உயிர் பிழைக்கச் செய்த மருத்துவர் எனக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் "உன் தந்தை உடல் நலம் குன்றியிருந்தபோது உன் தாயார் காட்டிய தைரியமும், மன உறுதியும் அசாத்தியமானவை. இப்போது  உன் தந்தை மறைந்து விட்ட நிலையில், உன் தாயாரின் வழிகாட்டுதல் உங்கள் குடும்பத்துக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய கணிப்பு மிகச் சரியாக இருந்தது. நாங்கள் நால்வரும் படித்து முடித்து (அப்போது நான் மட்டும்தான் படிப்பை முடித்திருந்தேன்) வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறும் வரை ஒரு திறமையான நிர்வாகி போல் எங்களைப் பார்த்துக் கொண்டார் அம்மா. 

அன்பு, அக்கறை, விவேகம், திட்டமிட்டுச் செயல்படுதல் இவை எல்லாம் கலந்ததுதான் அவர் எங்களை வழி நடத்திய வரலாறு.

என் அம்மாவைப் பற்றி நினைக்கும்போது, என் மனத்திரையில் பல்வேறு நினைவுகள் வந்து போகின்றன. 

அவருடைய  ஆழமான சிந்தனை, பொது அறிவு சார்ந்த அணுகுமுறை (common sense approach), துணிவு, உறுதியான எண்ணங்கள்/நம்பிக்கைகள்/கொள்கைகள், 'என்னதான் நடக்கும் பார்க்கலாம்' என்ற மனம் கலங்காத தன்மை, மற்றவர்களுக்குத் தன்னால் ஒரு சிறு அசௌகரியம் கூட ஏற்படக் கூடாது என்ற உறுதி, நேர்மை, நீதி வழுவாத தன்மை இவை அவருடைய அடிப்படைப் பண்புகள். 

அவருடைய பண்புகள் அனைத்தையும் பட்டியலிடுவது என்பது கடலுக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் விவரிக்க முயல்வதைப் போல் இயலாத செயல்.

நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் குறைவான வருவாயுடன் வாழ்ந்து வந்தபோது, என் அம்மா சொல்லுவார்: "நமக்குச் சொந்த வீடு இருக்கு. நம்ப வயல்ல விளையற நெல்லு நம்ப சாப்பாட்டுக்குப் போதும். வீட்டில மாடு இருக்கு. ஏதாவது பெரிசா நடந்து நம்பகிட்ட தம்படிக்  காசு கூட இல்லாமப் போனாக்கூட, வெறும் மோர் சாதமாவது சாப்பிட்டுக் கொண்டு காலத்தை ஓட்டலாம்!"

அவருடைய இந்த ஆக்கபூர்வமான சிந்தனை என் வாழ்க்கையின் பல நிலைகளில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

நாங்கள் பின்பற்ற வேண்டிய நியாயங்கள், சுயமுன்னேற்றச் சிந்தனைகள், கோட்பாடுகள், வழிமுறைகள் ஆகியவை பற்றி  எங்களிடம் திரும்பத் திரும்பப் பேசுவது பற்றி அவர் அலுத்துக் கொண்டதே இல்லை. சில சினிமாப் பாடல்களிலிருந்து சில வரிகளைக் குறிப்பிடுவார்.

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்" என்ற பாடலில் வரும்

"வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்.
உன்னைக் கேட்டு, என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா?"

என்ற வரிகளைக் குறிப்பிட்டு, "இதெல்லாம் உங்களுக்காகவே எழுதின மாதிரி இருக்கு!" என்று எங்களைக் கேலி செய்வார். 

அவர் கேலியாகச் சொன்னாலும், இந்த வரிகளை நான் இன்றும் நினைவு கூர்வது அவர் தன்  கருத்துக்களை என் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பவர் என் அம்மா. ஆனால் தான் ஏமாளியாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டார். 

ஒருமுறை எங்கள் அண்டை வீட்டிலிருந்து ஒரு சிறுமி என் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் "அம்மா ரெண்டு ரூபா இருந்தா கேட்டாங்க" என்றாள்.

அவர்கள் ஏழ்மையானவர்கள் இல்லை. எங்களை  விட  வசதியானவர்கள்தான். 

அண்டை வீடுகளில் அவ்வப்போது இது போன்று கைமாற்று வாங்கி ஓரிரு நாட்களில் திருப்பிக் கொடுக்கும் வழக்கம் உண்டுதான். ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி கடன் வாங்கினால் உடனே திருப்பிக் கொடுக்க மாட்டார். பலமுறை கேட்டுத்தான் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க வேண்டும். 

என் அம்மா அந்தச் சிறுமியிடம், "எங்கிட்ட பணம் இல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அந்தச் சிறுமி சென்றதும், நான் என் அம்மாவிடம், "ஏம்மா! ரெண்டு ரூபா கூட இல்லேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?" என்றேன்.

"ஏண்டா! அவங்ககிட்ட ரெண்டு ரூபா இல்லேன்னுதானே நம்பகிட்ட கேக்கறாங்க? அவங்ககிட்ட ரெண்டு ரூபா இல்லாத மாதிரி, நம்ப கிட்டயும் ரெண்டு ரூபா இல்லாம ஏன் இருக்கக் கூடாது?" என்றார் அம்மா.

அம்மாவின் லாஜிக்கைக் கேட்டு ஒரு நிமிடம் அசந்து போய் விட்டேன்! பொருளாதார விஷயங்களில் அவருடைய விவேகமான அணுகுமுறைக்கு இது ஒரு உதாரணம்.

எங்கள் இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பம். 

அப்போது தினத்தந்தி பத்திரிகை, எஸ் எஸ் எல் சி தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவன்/மாணவிக்கு ஐநூறு ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கொண்டிருந்தது. (அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ஐநூறு ரூபாய்க்கும் குறைவுதான்).

நான் அந்தப் பரிசைப் பெற வேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பம். அந்தப் பணம் கிடைத்தால் என்னைக் கல்லூரியில் படிக்க வைப்பது கொஞ்சம் எளிதாக இருக்கும் என்பதால் அவருக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.

நான் 8 அல்லது 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்த எண்ணத்தை என் மனதில் விதைத்து வந்தார் அவர். 

எங்கள் பள்ளியில் ரேங்கிங் முறை கிடையாது. (அன்றைய சூழ்நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் ரேங்கிங் முறை இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.) 

மதிப்பெண்களின் அடிப்படையில், நான் என் வகுப்பில் மூன்றாவது அல்லது நான்காவது நிலையில் இருந்தேன் என்றுதான் சொல்ல முடியும். 

ஆயினும் என் அம்மா என் மனதில் விதைத்த விதை கொஞ்சம் கொஞ்சமாக முளை விட்டு வளர்ந்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்!

எஸ் எஸ் எல் சி பரீட்சை துவங்குவதற்குச் சில நாட்கள் முன்பு எங்கள் பள்ளியில் வகுப்புகள் முடிந்து படிப்பதற்கான விடுமுறை (study leave) அறிவிக்கப்பட்டதும் எங்கள் தலைமையாசிரியரின் வாழ்த்துக்களைப்  பெறுவதற்காக அவரைச் சந்தித்தேன்.

எங்களுக்கு ஆங்கிலம், மற்றும் கணக்கு வகுப்பு எடுத்த அவருக்கு என் மீது அதிக அன்பு உண்டு. அதனாலோ என்னவோ, என்னிடம் "பள்ளியில் முதல் மாணவனாக வர முயற்சி செய்" என்று அவர் என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதே எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவிடம் என் தலைமை ஆசிரியர் சொன்னதைச் சொன்னேன். என் அம்மா சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

"வாழ்த்தினதுதான் வாழ்த்தினார், ஸ்டேட் ஃபர்ஸ்டா  வான்னு வாழ்த்தக் கூடாதா? வார்த்தையிலே எதுக்கு கஞ்சத்தனம்?"  என்றார் அம்மா! 

இதை அவர் குறைப்பட்டுக்கொவது போல்தான் சொன்னார். அவருடை இலக்கை என் தலைமை ஆசிரியர் குறைத்து விட்டாரே!

பரீட்சை முடிவுகள் வந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் நான் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். என்னால்  இதை நம்பவே  முடியவில்லை. என் அம்மாவின் உந்துதல்தான் என்னுடைய இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

என் பள்ளி ஆசிரியர்கள், என் நண்பர்கள் என்று பலரும் நான் முதலிடம் பெற்றதைப் பற்றி வியப்படைந்தனர். ஆனால் என் அம்மா, தான் இதை எதிர்பார்த்தது போல், இதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டார். அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஆச்சரியம் இல்லை!

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நான் என் அம்மாவின் விருப்பத்துக்கும், ஆலோசனைக்கும் மாறாக நடந்து கொண்டிருக்கிறேன். 

நான் ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் அவர் தன் ஆலோசனைகளை எனக்கு வழங்கத்  தவறியதில்லை. என்னுடைய முடிவு புத்திசாலித்தனமானதல்ல என்று அவர் கருதினால் அதை என்னிடம் தெரிவிக்கத் தயங்கியதுமில்லை.

குறிப்பாக என்னுடைய 45ஆவது வயதில் நான் ஒரு நல்ல வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் துவங்கியதை அவர் கொஞ்சம் கூட ஒப்புக் கொள்ளவில்லை. 

என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய அளவில் நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது அவருடைய வாதம். ஆயினும், என் வாழ்க்கைக்கு உகந்தது என்று கருதி நான் எடுத்த முடிவை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

அதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். 

நான் சில பின்னடைவுகளைச் சந்தித்தபோது, "அப்பவே சொன்னேனே கேட்டியா?" என்று அவர் ஒருமுறை கூடச் சொன்னதில்லை. கனிவுடனும், கரிசனத்துடனும் 'இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமே!' என்று ஆலோசனைகள் மட்டும் சொல்லுவார்.

இன்றைய நிலையில் நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று எடைபோட்டுத் தன் கருத்தைச் சொல்ல அம்மா என்னுடன் இல்லை. எங்கேயோ இருந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொ ண்டிருக்கிறார் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்!

( Reflections from my life என்ற என் வலைத்தளத்தில்  'My mother  Late Vijayavalli Parthasarathy' என்ற தலைப்பில் 22/8/2011 அன்று நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)

Wednesday, November 15, 2017

1. இது என்னம்மா புதுக்கதை?

'அப்பா கதைகள்' என்ற வலைப்பதிவில் அப்பாக்களை மையமாக வைத்துச் சில (கற்பனைக்) கதைகளை எழுதி இருக்கிறேன்.

அதுபோல் அம்மாக்களை மையமாக வைத்துச் சில கதைகளை இந்தப் பதிவில் எழுத எண்ணம். 

இவையும் கற்பனைக் கதைகள்தான். ஆனால் முதல் பதிவாக என் அம்மாவைப் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு பதிவைத் தமிழில் எழுத உள்ளேன். அதற்குப் பிறகு வரும் கதைகள் எல்லாம் கற்பனைக் கதைகள்தான்.

அம்மா கடவுளின் மிக ஆச்சரியமான படைப்பு. தன் குழந்தையிடம் ஒரு அம்மாவுக்கு இருக்கும் அன்பு, அக்கறை இவற்றுக்கு ஈடு இணை கிடையாது

என் பெற்றோர்களின் அம்மாக்கள் தொடங்கி, என் அம்மா, என் குழந்தைகளின் அம்மா, என் பேத்தியின் அம்மா என்று நான்கு தலைமுறை அம்மாக்களை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். 

இவர்களைத் தவிர இன்னும் பல அம்மாக்களை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் ஒரு சில நிமிடங்களே பார்த்து வியந்த அம்மாக்களும் உண்டு.

தலைமுறை வேறுபாடுகள் அம்மாக்களிடமும் வேறுபாடுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் அம்மா என்ற உறவின் அடிப்படை குணம் மாறவில்லை. மாறவும் மாறாது.

வாருங்கள் அம்மாக்களின் உலகை எட்டிப் பார்ப்போம்.