Saturday, November 25, 2017

3. கை கொடுத்த கலை (தலை!)

திருமணத்துக்குப் பின் அபயா வேலைக்குப் போக வேண்டாம் என்று கார்த்திக் சொன்னபோது பலரும் முகம் சுளித்தார்கள். 

"இந்தக் காலத்தில இப்படி யாராவது சொல்லுவாங்களா என்ன?" என்றாள் அபயாவின் அம்மா.

ஆனால் அபயா இதை இயல்பாக எடுத்துக் கொண்டாள். வேலையை விடுவதில் அவளுக்கு  வருத்தம் இல்லை. 

புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வது, சமையலில் புதிய முயற்சிகள் செய்வது போன்றவற்றில் அவளுக்கு ஆர்வம் இருந்ததால், வீட்டில் இருந்து கொண்டு தனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

ஆனால் திருமணத்துக்குப் பின் கார்த்திக் அவளை சுதந்திரமாக இருக்க விடவில்லை. 

வீட்டில் அவர்கள் இரண்டு பேர்தான். குடும்பச் செலவுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கொடுத்து வந்தவன், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைக் குறைத்து விட்டான்.

"ஏன், விலைவாசியெல்லாம் குறைஞ்சுடுச்சா, இல்லை ஆஃபீஸ்ல உங்க சம்பளத்தைக் குறைச்சுட்டாங்களா?" என்றாள் அபயா. 

"ரெண்டும் இல்லை. நீ ஊதாரித்தனமா செலவு பண்ணிக்கிட்டிருக்கே! எம்ப்ராய்டரி பண்றேன்னு வீடு முழுக்க கலர் நூலும் ஊசியுமாப் பரப்பி வச்சிருக்கே! புதுசு புதுசாச் சமைக்கிறேன்னு சாமான்களை வேஸ்ட் பண்றே! ஆனா எதையுமே வாயில வைக்க முடியல...."

"வாயில வைக்க முடியாமத்தான் இன்னும்  கொஞ்சம் போடுன்னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டீங்களா?"

"எதோ ஒண்ணு ரெண்டு நல்லா இருந்திருக்கலாம்.. உனக்கு சிக்கனம்னா என்னன்னு தெரியணும். அதான் அமௌண்ட்டை கட் பண்ணிட்டேன்" என்றான் கார்த்திக் பெருமையுடன்.

"நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்கிட்டிருந்தா இந்த நிலை எனக்கு வந்திருக்காதே!" என்றாள் அபயா. சொல்லும்போதே அழுகை பீறிட்டெழ, குரல் கம்மியது.

"என்ன நிலைமை வந்துடுச்சு உனக்கு? நான் என்ன ராமர் மாதிரி உன்னைக் காட்டுக்கு அனுப்பிட்டேனா என்ன?"

"அப்படிப் பண்ணினாலும் பரவாயில்லை. காட்டில பழங்களைப் பறிச்சு சாப்பிட்டுட்டு மான்களையும் முயல்களையும் பாத்துக்கிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருந்திருப்பேன்."

"காட்டில மானும், முயலும் மட்டும்தான் இருக்குமா? சிங்கம், புலி, நரி எல்லாம் கூடத்தான் இருக்கும்!"

"காட்டில் மட்டும்தானா?" என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்ட அபயா, "அப்படின்னா நான் வேலைக்குப் போறேன்!" என்றாள்.

கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை. 

ஆனால் அவளுக்கு ஏற்ற வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அவளுடைய பி.எஸ்.சி படிப்பு மற்றும் குறைந்த அனுபவம்  இவற்றால் ஒரு நல்ல வேலையை அவளுக்குப் பெற்றுத் தர இயலவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகும் அவளுக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆயினும் அபயா சோர்வடையாமல் முயன்று கொண்டுதான் இருந்தாள்  

அப்போது எதிர்பாராத விதத்தில், எதிர்பார்க்கக் கூடிய ஒன்று நிகழ்ந்து விட்டது. அவள் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகத் தொடங்கி விட்டது.  இனி வேலை வேட்டை அவ்வளவுதான் என்று முயற்சிகளை மூட்டை கட்டி விட்டாள் அபயா.

அபயா கருவுற்ற பிறகும், கார்த்திக்கின் போக்கு மாறவில்லை. டாக்டர் கூறியபடி அவளுக்கு மருந்துகள், டானிக்குகள் வாங்கிக் கொடுத்தான். மற்றபடி வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் அவனுடைய பிடிவாதமான கஞ்சத்தனம் தொடர்ந்தது.

அபூர்வா பிறந்த பிறகும் கார்த்திக்கின் அணுகுமுறையில் மாற்றமில்லை. குழந்தைக்கென்று அவள் எதையும் விரும்பி வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 

"ஏதாவது வேணும்னா எங்கிட்ட சொல்லு. நான் வாங்கித் தரேன்" என்பான் கார்த்திக். ஏதோ அவளிடம் பணம் கொடுத்தால், அதை அவள் தொலைத்து விடுவாள் அல்லது வீணாக்கி விடுவாள் என்று நினைப்பது போல் இருந்தது அவன் பேச்சு.

குழந்தைக்கு இரண்டு வயதானதும் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டியதுதான் என்று முடிவு செய்தாள் அபயா. குழந்தையை எங்காவது காப்பகத்தில் விட வேண்டியததுதான். 

பிறந்ததிலிருந்து இரண்டு வருடம் அம்மாவுடனேயே இருந்த குழந்தை தினமும் பத்து மணி நேரம் அம்மாவைப் பிரிந்திருக்குமா? ரொம்ப அழுவாளோ? 

குழந்தை சமாதானமடைந்து இயல்பாக இருக்கப் பல மாதங்கள் பிடிக்கலாம். வேறு வழியில்லை. கார்த்திக்கின் முரட்டுப்  பிடிவாதத்தால், அவள் தன் குழந்தைக்கு வேண்டியதைக் கூடச் செய்ய முடியாமல் போன நிலையில், அவள் சம்பாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.  

ருநாள் கார்த்திக்கிடம் "குழந்தைக்கு ஹேர்கட் பண்ணணும். நூறு ரூபாய் கொடுங்க" என்றாள் அபயா.

அபூர்வாவின் தலையைப் பார்த்து விட்டு "முடி ஒண்ணும் அதிகமா இல்லியே! பெண் குழந்தைக்கு முடி நிறைய இருந்தாத்தான் நல்லது" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அபயாவுக்கு ஆத்திரமும், இயலாமையும்  பொங்கிக் கொண்டு வந்தன. அது மாதக் கடைசி. அவளிடம் கொஞ்சம்தான் பணம் இருந்தது. அதில் நூறு ரூபாயை முடி வெட்டச் செலவழித்து விட்டால் வேறு ஏதாவது செலவுக்கு இடிக்கும். 

சில நாட்கள் கழித்து, மாதம் பிறந்ததும், கார்த்திக் பணம் கொடுப்பான். அப்புறம் கூட முடி வெட்டிக் கொள்ளலாம். குழந்தைக்கு முடி வெட்டக் கூடப்  பணம் இல்லாமல் அவ்வளவு மோசமான நிலையிலா தான் இருக்கிறேன் என்று நினைத்தபோது மனதில் கோபமும் துக்கமும் நிரம்பி வழிந்தன.

குழந்தைக்குப் பால் கொடுக்கலாம் என்று பால் காய்ச்ச அடுப்படிக்குப் போனாள். பால் பாக்கெட்டைக்  கத்திரிக்கோலால் வெட்டிப் பிரித்தபோது ஒரு யோசனை தோன்றியது.

பாலைக் காய்ச்சாமலே, கையில் கத்தரிக்கோலுடன் கிடுகிடுவென்று முன்னறைக்கு வந்தாள் ஒரு பழைய செய்தித்தாளைத் தரையில் பிரித்துப் போட்டு அதன்மீது அபூர்வாவை அமர வைத்தாள். கத்தரிக்கோலால் குழந்தையின் தலைமுடியை கவனமாக வெட்டத் தொடங்கினாள்.

மாலை கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் அபூர்வாவின் தலையைப் பார்த்து விட்டு, "ஹேர்கட் பண்ணிட்டியா?" என்றான். அபயா பதில் சொல்லவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த சிறிய குழந்தைப் பூங்காவில் அபூர்வாவை விளையாட விட்டு விட்டு அபயா ஓரமாக அமர்ந்திருந்தபோது, அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு பெண்மணி அவளிடம் வந்து "குழந்தையோட ஹேர்கட் ரொம்ப நல்லா இருக்கே! எங்கே வெட்டினீங்க?" என்றாள் 

"நானேதான் வெட்டி விட்டேன்" என்றாள் அபயா சிரித்துக் கொண்டே.

"ரொம்ப நல்லா இருக்கு. ப்ரொஃபஷனல் ஜாப்!" என்று பாராட்டிய அந்தப் பெண், "நீங்க எந்த ஃபிளாட்டில் இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அடுத்த நாள் அந்தப் பெண் அபயாவின் வீட்டுக்கு வந்தாள், தன் குழந்தையை அழைத்துக் கொண்டு.

"வாங்க" என்று அவர்களை அழைத்து அமர வைத்தாள் அபயா.

"உங்க பொண்ணுக்கு நீங்க செஞ்சிருந்த ஹேர்கட் ரொம்ப நல்லா இருந்தது. நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா என்னோட பையனுக்கும் சிம்பிளா ஹேர்கட் பண்ணி விட முடியுமா? சலூன்ல உக்காரவே மாட்டேன்னு அழுது ஆட்டம் போடறான்" என்றாள் 

"உன் பேரு என்னடா கண்ணா?" என்று அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தடவியபடியே கேட்ட அபயா, ஒரு பழைய செய்தித்தாளைக் கீழே விரித்து அதன் மீது அவனை அமர்த்தினாள். அவன் பின்னே அமர்ந்து அவனுடன் பேச்சுக் கொடுத்தபடியே அவன் முடியை வெட்டினாள். பத்து நிமிடங்களில் வேலை முடிந்து விட்டது. 

"ரொம்ப நல்லா வந்திருக்கு. சலூன்ல கூட இந்த அளவுக்குப் பண்ண மாட்டாங்க. நீங்க ஏதாவது கோர்ஸ் படிச்சிருக்கீங்களா என்ன?" 

அபயா ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்.

"இஃப் யூ டோன்ட் மைண்ட், சலூன்ல நூத்தி இருவது ரூபா கேப்பாங்க. நான் நூறு ரூபா கொடுக்கறேன். நீங்க மறுக்காம வாங்கிக்கணும்" என்றாள்.

அபயா மறுக்கவில்லை. அந்தப் பெண் விடைபெற்றுக்  கிளம்பியபோது,  "உங்களுக்குத் தெரிஞ்சவங்க குழந்தைகளுக்கு ஹேர்கட் பண்ணணும்னாலும் சொல்லுங்க" என்றாள் சற்றுத் தயக்கத்துடன்.

டுத்த சில நாட்களில் அந்தக் குடியிருப்பிலிருந்தும், அக்கம்பக்கத்திலிருந்தும் தினமும் இரண்டு மூன்று பேர் குழந்தைகளுடன் வர ஆரம்பித்தனர். சில நாட்களில் ஐந்தாறு பேர் கூட வந்தனர். 

கார்த்திக்குக்கு விஷயம் தெரிந்ததும், "இது என்ன வீடா சலூனா? ஒரு குடும்பத் தலைவி செய்யற வேலையா இது?" என்றான்,

"அபூர்வாவுக்கு ஹேர் கேட் பண்ணப் பணம் கேட்டேன். நீங்க கொடுக்கல. நானே வெட்டினேன். அது நல்லா இருந்ததுன்னு 'என் குழந்தைக்கும் பண்ணி விடு'ன்னு சில பேர் வந்தாங்க. பண்ணி விட்டேன். நான் கேக்காமயே பணம் கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டேன். பால்கனியில தரையில பேப்பர் போட்டு உக்கார வச்சுத்தான் கட் பண்றேன். முடியையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில போட்டு அவ்வப்போது கீழ போய்க் குப்பைத் தொட்டியில போட்டுடறேன். இங்க வர குழந்தைங்க அபூர்வாவுக்கு ஃபிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. அபூர்வாவும் சந்தோஷமா இருக்கா. உங்களுக்கு இதுல ஏதாவது பிரச்னை இருக்கா?" என்றாள் அபயா.

கார்த்திக் பதில் சொல்லவில்லை. அவனுக்குப் பிடிக்காவிட்டாலும் இதைத் தடுக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டாள்.

சில நாட்கள் கழித்து ஒரு பெண்மணி அபயாவைப் பார்க்க வந்தாள்.

"நீங்க ஹேர்கட் பண்ணுவீங்களாமே!" என்றாள்.

"குழந்தை வரலியா? பையனா, பொண்ணா?" என்றாள் அபயா.

'குழந்தைக்கு இல்லை, எனக்குத்தான். பார்லர்ல ஐநூறு ரூபா கேக்கறாங்க. ரொம்ப  அநியாயமா இருக்கு!"

"எனக்கு முன்னூறு ரூபா கொடுங்க போதும்!" என்றாள் அபயா. 

இனி எப்போதும் கார்த்திக்கின் கையை எதிர்பார்க்க வேண்டி இருக்காது என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றியது.









No comments:

Post a Comment